விண்வெளியல் தொடரும் சகாப்தம். ( நன்றி தினமணி )
விண்வெளிக்குச் செல்ல எது வசதி? ஷேர் ஆட்டோவில் நெருக்கியடித்து உட்கார்ந்து போவதுபோல ஒரு கூட்டுக்குள் அடைந்து கிடந்தபடி செல்வதா அல்லது விமானத்தில் உட்கார்ந்து செல்வதுபோல வசதியாக அமர்ந்து செல்வதா? எல்லோரும் இரண்டாவதாகச் சொன்னதுதான் சரி என்று கூறுவார்கள்.
முதலாவதாகச் சொல்லப்பட்ட முறையை ரஷியா ஆரம்ப காலத்திலிருந்து இன்றளவும் பின்பற்றி வருகிறது. அமெரிக்காவோ இரண்டாவதாகச் சொல்லப்பட்ட முறையைப் பின்பற்றி விமானம் போன்ற விண்வெளி வாகனத்தை உருவாக்கி 30 ஆண்டுகாலம் அதைப் பயன்படுத்தி வந்தது. விண்வெளி ஓடம் என்றும் ஆங்கிலத்தில் ஷட்டில் என்றும் அழைக்கப்பட்ட அந்த வாகனம் வசதியாகத்தான் இருந்தது.
அமெரிக்கா மொத்தம் ஆறு விண்வெளி ஓடங்களைத் தயாரித்தது. அவற்றில் ஐந்துதான் மாறி மாறி விண்வெளி வீரர்களை ஏற்றிச் சென்றன. இவற்றில் இரண்டு விபத்துக்குள்ளாகி அழிந்தன. மீதி மூன்றும் இப்போது அருங்காட்சியகத்துக்குப் போய்ச் சேர்ந்துவிட்டன.
காரணம், இவை மூன்றும் மிகவும் பழசாகி விட்டன. அட்லாண்டிஸ் என்னும் பெயர் கொண்ட விண்வெளி ஓடம் உயரே சென்றுவிட்டு ஜூலை 21-ம் தேதி பூமிக்குத் திரும்பியதும் விண்வெளி ஓடங்களின் சகாப்தம் முடிவடைந்தது.
விண்வெளி ஓடங்கள் ஓய்வு பெற்றதன் விளைவாக, அமெரிக்க விண்வெளி வீரர்களை உயரே அனுப்ப இப்போது அமெரிக்காவிடம் விண்கலம் எதுவும் இல்லை. வேறு வழியின்றி அமெரிக்கா இப்போது ரஷியாவை நம்பி நிற்கிறது. அமெரிக்கா மாற்று ஏற்பாடு செய்கிறவரையில் அதாவது இன்னும் சில ஆண்டுகளுக்கு அமெரிக்க விண்வெளி வீரர்கள் ரஷிய விண்கலம் மூலம்தான் விண்வெளிக்குச் சென்று திரும்புவர்.
கடந்த காலத்தில் இது சில தடவை நடந்துள்ளது. இதற்கு ரஷியாவுக்கு அமெரிக்கா கட்டணம் செலுத்துகிறது. அண்மையில் இக் கட்டணம் உயர்த்தப்பட்டது.
ஒருகாலத்தில் விண்வெளி வீரர்களை உயரே அனுப்ப ஏன் சந்திரனுக்கும் அனுப்ப அமெரிக்காவிடம் ராட்சத ராக்கெட்டுகளும் நம்பகமான விண்கலங்களும் இருந்த நிலைமைபோய் இப்போது பிற நாட்டை அதாவது ரஷியாவை நம்பியிருக்கும் நிலைமை அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அரசு எடுத்த சில கொள்கை முடிவுகளும் இந்த நிலைமைக்குக் காரணம்.
மனிதனின் விண்வெளிப் பயணம் 1961-ம் ஆண்டில் தொடங்கியது. அந்த ஆண்டில் ரஷியாவின் யூரி ககாரின் பல அடுக்கு ராக்கெட் ஒன்றின் உச்சியில் பொருத்தப்பட்ட விண்கலம் ஒன்றில் அமர்ந்தபடி உயரே சென்று பூமியைச் சுற்றி விட்டுத் திரும்பினார்.
விண்வெளிக்குச் செல்ல மிக நீண்ட காலமாக அமெரிக்காவும் ரஷியாவும் இவ்விதம் ராக்கெட் முறையைத்தான் பின்பற்றி வந்தன. ரஷியா தனது விண்வெளி வீரர்களுக்காக உருவாக்கிய சோயுஸ் எனப்படும் விண்கலத்தில் கடந்த பல ஆண்டுகளில் நிறைய முன்னேற்றங்களைச் செய்துள்ளது. சோயுஸ் விண்கலத்தை ராக்கெட் மூலம் உயரே செல்லும் முறையைத்தான் ரஷியா இன்னமும் பின்பற்றி வருகிறது.
கடந்த சுமார் 40 ஆண்டுகளாக சோயுஸ் விண்கலங்கள் பிரச்னை இன்றி வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகின்றன. சுமார் 300 கிலோ மீட்டர் உயரத்தில் அமைந்தபடி பூமியைச் சுற்றி வரும் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ரஷிய மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர்கள் அவவப்போது இந்த சோயுஸ் விண்கலம் மூலம்தான் சென்று வருவர்.
அமெரிக்காவும் சரி, ஆரம்பத்தில் விண்வெளி வீரர்களை உயரே அனுப்ப மெர்க்குரி, ஜெமினி, அப்போலோ ஆகிய விண்கலங்களைப் பயன்படுத்தியது. இவை ராக்கெட் மூலமே உயரே செலுத்தப்பட்டன. சந்திரனுக்கு அமெரிக்க விண்வெளி வீரர்களை ஏற்றிச் சென்ற அப்போலோ விண்கலம் ராக்கெட் மூலம்தான் உயரே செலுத்தப்பட்டது.
ஆனால், ராக்கெட்டைப் பயன்படுத்துவதில் ஒரு பிரச்னை உண்டு. விண்கலத்தைச் சுமந்து செல்லும் ராக்கெட் உயரே செல்லும்போது ராக்கெட்டின் ஒவ்வோர் அடுக்கும் எரிந்து முடிந்ததும் கழன்று கீழே விழுந்துவிடும்.
கடைசியில், விண்கலம் ஒன்று மட்டும்தான் முழுதாக விண்வெளிக்குப் போய்ச்சேரும். விண்வெளி வீரர்கள் பூமிக்குத் திரும்பும் கட்டத்தில் அந்த விண்கலத்தில் சில பகுதிகள் கழற்றிவிடப்பட்டு விண்வெளி வீரர்கள் நெருக்கியடித்துக் கொண்டு அமர்ந்துள்ள சிறிய கோளம் மட்டும்தான் பூமியில் வந்து விழும்.
பல நூறு டன் எடை கொண்ட ராட்சத ராக்கெட் பெரும் உறுமலுடன் உயரே செல்கிறது என்றால் கடைசியில் வெறும் மூன்று டன் எடை கொண்ட கோளம் மட்டுமே பூமிக்குத் திரும்புகிறது.
அக் கோளம் பாரசூட்டுடன் இணைக்கப்பட்டதாகக் கீழே இறங்கினாலும் இறுதியில் தரையில் பொத்தென்று வந்து விழுகிறது. அந்தக் கோளத்தை மறுபடி பயன்படுத்த முடியாது. ஆகவே, ஒவ்வொரு தடவையும் புதிதாக ராக்கெட்டையும் விண்கலத்தையும் தயாரித்தாக வேண்டும்.
ஆகவேதான் மீண்டும் மீண்டும் பயன்படுத்தத்தக்க விண்வெளி வாகனத்தை அமெரிக்கா 1970-களின் பிற்பகுதியில் உருவாக்கியது. இதுவே விண்வெளி ஷட்டில் ஆகும். இது முழுதாக உயரே சென்றுவிட்டு முழுதாக பூமிக்குத் திரும்பியது. அசப்பில் பார்த்தால் இது விமானம்போலத் தோற்றம் அளிக்கும். ஆனாலும் இது விமானம் அல்ல.
ஷட்டில் வாகனத்தின் வெளிப்புறத்தில் மூன்று எரிபொருள் டாங்கிகள் உண்டு. ஷட்டில் சுமார் 300 கிலோ மீட்டர் உயரத்துக்குச் சென்று பூமியைச் சுற்றும் பாதையை அடைவதற்கு இந்த மூன்று டாங்கிகளிலும் உள்ள எரிபொருள் உதவியது.
இந்த மூன்று டாங்கிகளும் ஒரு கட்டத்தில் அடுத்தடுத்து கழன்று விழுந்தன. இவற்றில் ஒன்றை மட்டும் கடலிலிருந்து மீட்டு அதை மறுபடி பயன்படுத்தி வந்தனர்.
ஷட்டில் வாகனம் பூமியைப் பல தடவை சுற்றித் தனது பணியை முடித்த பின்னர் அல்லது சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்து செயலாற்றி முடிந்த பின்னர் பூமிக்குத் திரும்புகையில் கிளைடர் விமானம்போல செயல்பட்டு மெதுவாகத் தரை இறங்கும்.
சுருங்கச்சொன்னால், விண்வெளி ஷட்டில் மூலம் உயரே சென்று விட்டுத் திரும்புவது என்பது ஓரளவில் சொகுசுப் பயணமே. ஒரு தடவை சென்றுவிட்டு வந்த விண்வெளி ஷட்டிலை நன்கு செப்பனிட்டு மீண்டும் பயன்படுத்த முடியும்.
இந்த ஜூலையில் அட்லாண்டிஸ் விண்வெளி ஷட்டில் உயரே சென்று வந்ததையும் சேர்த்தால் அமெரிக்க விண்வெளி ஷட்டில்கள அனைத்தும் மொத்தம் 135 தடவை விண்வெளிக்குச் சென்று வந்துள்ளன.
அமெரிக்காவின் ஆறு விண்வெளி ஓடங்களில் சேலஞ்சர் விண்வெளி ஓடம் 1986-ம் ஆண்டில் உயரே கிளம்புகையில் வெடித்துச் சிதறியது. அதில் இருந்த ஏழு விண்வெளி வீரர்களும் உயிரிழந்தனர்.
2003 பிப்ரவரியில் கொலம்பியா என்னும் பெயர் கொண்ட ஷட்டில் வாகனம் தரை இறங்குவதற்கு சில நிமிஷங்களுக்கு முன்னர் நடுவானில் வெடித்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கல்பனா சாவ்லா உள்பட ஏழு அமெரிக்க விண்வெளி வீரர்கள் உயிரிழந்தனர். அப்போதே ஷட்டில் வாகனங்கள் இனி லாயக்கில்லை என்பது அனேகமாகத் தீர்மானிக்கப்பட்டுவிட்டது.
எனினும், அமெரிக்காவின் ஷட்டில் வாகனங்கள் கடந்த 30 ஆண்டுகளில் பல சாதனைகளைப் புரிந்துள்ளன. சர்வதேச விண்வெளி நிலையத்தை உருவாக்குவதற்கான எடைமிக்க பகுதிகள் ஷட்டில்கள் மூலமே உயரே எடுத்துச் செல்லப்பட்டன.
கிரகங்களை ஆராய்வதற்கான பல ஆளில்லா விண்கலங்கள் ஷட்டில்கள் மூலமே செலுத்தப்பட்டன. ஆனால், ஷட்டில்கள் பற்றிப் பல புகார்களும் உண்டு. ஷட்டில் பணம் விழுங்கி என்பது பிரதானப் புகாராகும்.
ஷட்டில் உருவாக்கப்பட்டபோது இந்த வாகனமானது விண்வெளிக்கு அடிக்கடி எளிதில் செல்ல உதவும் என்றும் குறைந்த செலவே பிடிக்கும் என்றும் மிகவும் பாதுகாப்பானது என்றும் சொல்லப்பட்டது. ஆனால், இந்த நோக்கங்களில் எதையும் ஷட்டில் பூர்த்தி செய்யவில்லை என்பது பல நிபுணர்களின் புகாராகும்.
ஒரு ஷட்டில் உயரே சென்றுவிட்டுத் திரும்பியதும் இரண்டே வாரத்தில் அதைச் செப்பனிட்டு மறுபடி செலுத்தத் தயார் செய்துவிட முடியும் என்று ஆரம்பத்தில் கூறப்பட்டது. ஆனால், நடைமுறையில் ஆறு மாதங்கள் பிடித்தன.
ராக்கெட் மூலம் ஒரு விண்கலத்தைச் செலுத்துவதற்கு ஆகும் செலவில் 15-ல் ஒரு பங்குதான் ஷட்டிலுக்குச் செலவாகும் என்று சொல்லப்பட்டது. ஆனால், ராக்கெட்டில் செலுத்துவதற்கு ஆவதைப்போல மூன்று மடங்கு செலவாகியது.
ஷட்டில் பூமிக்குத் திரும்புகையில் காற்று மண்டலம் காரணமாக அதன் வெளிப்புறப் பகுதிகள் பயங்கரமாகச் சூடேறும். விண்கலத்தையும் அத்துடன் உள்ளே இருக்கிற விண்வெளி வீரர்களையும் அந்த வெப்பம் தாக்காதபடி தடுக்க ஷட்டில் வாகனத்தின் வெளிப்புறத்தில் பல ஆயிரம் வெப்பத் தடுப்பு ஓடுகள் உண்டு. ஆனால், அவ்வப்போது இந்த வெப்பத் தடுப்பு ஓடுகள் இழக்கப்படும்.
இப் பிரச்னை ஷட்டில் வாகனங்களைக் கடுமையாகப் பாதித்தது. கொலம்பியா ஷட்டில் தரை இறங்குகையில் இந்த வெப்பத் தடுப்பு ஓடுகள் பல இடங்களில் இல்லாமல் போனதால் வெப்பம் உள்ளே தாக்கி கொலம்பியா தீப்பிடித்து வெடித்தது.
பொதுவில் ஷட்டில் உயரே செல்லும்போதுதான் இந்த ஓடுகள் பிய்த்துக்கொண்டு பறந்தன. அதாவது ஷட்டிலுடன் இணைந்த பெரிய எரிபொருள் டாங்கியில் மிகவும் குளிர்விக்கப்பட்ட எரிபொருள்கள் வைக்கப்பட்டன.
இந்த எரிபொருள்கள் ஆவியாகிவிடாமல் தடுப்பதற்கு எரிபொருள் டாங்கியின் வெளிப்புறம் மீது கெட்டியான நுரைபொருள் பூச்சு உண்டு. ஷட்டில் வாகனம் உயரே கிளம்புகையில் பல ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். அப்போது நுரைபொருளின் சில துண்டுப் பகுதிகள் பிய்த்துக்கொண்டு ஷட்டில் மீது அதி வேகத்தில் மோதியபோது ஷட்டிலின் வெப்பத் தடுப்பு ஓடுகள் பிய்த்துக் கொண்டன. இப் பிரச்சினை கடுமையாகியபோது விண்வெளி ஓடத்தின் பாதுகாப்புத் தன்மை கேள்விக்குறியாகியது.
இப்படியாகப் பல்வேறு காரணங்களால் இனி விண்வெளி ஓடம் மாதிரியில் புதிய வாகனத்தை மறுபடி உருவாக்கும் எண்ணத்தை அமெரிக்கா கைவிட்டு பழையபடி ராக்கெட் முறைக்கே மாறுவது என முடிவு எடுத்துள்ளது. ஆனால், பிரிட்டனைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று அமெரிக்க விண்வெளி ஓடம் மாதிரியில் ஸ்கைலான் என்ற விண்வெளி விமானத்தை உருவாக்குவதில் முனைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது பலவகைகளிலும் விண்வெளி ஓடத்திலிருந்து வேறுபட்டதாக இருக்கும்.
என். ராமதுரை
கீழே இருபது ரஷிய விண்வெளி ஓடம் சோயுஸ்
சோயுஸ் விண்கலத்தின் உள்ளே.
குறுகலான இருக்கைகள் (ஆனால் மனிதனுக்கு சேப்டி)
ஷட்டல் வகை விண்வெளி ஓடம்உள் அமைப்பு ஒரு பகுதி