Sunday, 16 October 2011

"உலக விண்வெளி வாரம்

அபகரிப்பு, ஆபாசம், இழிசொல், ஈனத்தனம், உயிர்க்கொலை, ஊழல், எத்து, ஏமாற்று என்று அரசியலில் புதிய ஆத்திச்சூடி உருவாகிறது. மதக்கலவரங்களும் சாதிச் சண்டைகளும் மாநிலப் பிரிப்புகளும் சுற்றுச்சூழல் பிரச்னைகளும் அண்டை நாட்டு ஊடுருவல்களும் உள்நாட்டில் பரவி நிற்கிற காலகட்டம். அக்டோபர் முதல் நாள் "சர்வதேச முதியோர் தினம்' மறுநாள் காந்திஜி பிறந்த நாள் என்று தொடங்கி 80 வயது நிறையும் மூத்த விஞ்ஞானி ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் பிறந்தநாள் (அக்டோபர் 15) எல்லாம் கொண்டாடப்பட வேண்டியவை. கல்விக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்யும் பண்டிகைகளும் விண்வெளி வார விழாவும் (அக்.4-10) ஒருசேர நடந்தேறி வருகின்றன.

1957 அக்டோபர் 4 அன்று ஸ்புட்னிக் என்ற உலகின் முதலாவது செயற்கைக்கோள் செலுத்தப் பெற்றது. 1967 அக்டோபர் 10 அன்று "புற விண்வெளி அமைதி உடன்படிக்கை' அறிவிப்பு ஆயிற்று. அக்டோபரில் இந்த இரண்டு தினங்களுக்கு இடைப்பட்ட வாரமே "உலக விண்வெளி வாரம்'.
""விண்வெளி அறிவியலையும் தொழில்நுட்பங்களையும் வளங்குன்றா மேம்பாட்டுக்கு அமைதியான வழிமுறைகளில் கையாளுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி ஆட்சியாளர்களுக்கும் குடிமக்களுக்கும் உலக அளவில் பொது நிகழ்ச்சிகள் நடத்தி விழிப்புணர்வை அதிகரிக்கச் செய்வதே'' ஐக்கிய நாடுகள் சபையின் நோக்கம். இந்த ஆண்டு மனித விண்வெளிப் பயணங்கள் பற்றிய தகவல் பரவலே மையக்கருத்து.
1961 ஏப்ரல் 12 அன்று யூரி ககாரின் என்கிற சோவியத் வீரர் விண்வெளிப் பாதையில் பூமியை ஒரு முறை சுற்றித் திரும்பிய சாகசத்தின் பொன்விழா ஆண்டும்கூட.
இன்றைய தலைமுறையினர்க்கு இத்தகைய அறிவியல் சாதனையாளர்களையும் இடைவிடாது நினைவுபடுத்தியாக வேண்டும். இல்லையெனில் அவர்கள் சினிமாவிலும் சின்னத்திரையிலும் மூழ்கிவிடுவார்கள். இனியேனும் வெறுமனே சின்னத்திரை சீரியல் கண்டு குடும்பத்தில் கலகம் மூட்டாமல் வீராங்கனையர் புகழ் பரப்புவோமே. இந்த ஆண்டு பன்னாட்டு மகளிர் தினம் (மார்ச்-3) முதன்முதலில் (1911) அனுசரிக்கப்பட்டதன் நூற்றாண்டும் அல்லவா?
"வானவூர்தி ஓட்டலாம் பெண்கள்' என்ற பாவேந்தர் சொல் இன்று பலித்துவிட்டது. விமானம் ஓட்டுவதற்கான உரிமம் (1930) பெற்ற ஊர்மிளா கே.பரீக், "டெக்கான் ஏர்வேஸ்' என்னும் முதல் வர்த்தக விமானம் (1947) ஓட்டிய பெருமைக்குரிய பிரேம் மாத்தூர் (1947), சரளா தக்ராள் (1948), உலகின் முதலாவது "ஏர் பஸ்' பெண் விமானி (1966) துர்கா பானர்ஜி, போயிங் 737 ஓட்டிய செüதாமினி தேஷ்முக் (1985), "சேதக்' ஹெலிகாப்டர் ஓட்டிய முதல் இந்திய மகளிர் சிம்ரன் சோதி மற்றும் செரில் தத்தா போன்ற இந்தியப் பெண் விமானியரை மறந்துவிட்டோம்.
உலக விண்வெளி வரலாற்றில் இன்றுவரை 55 பெண்மணிகள் புவியைச் சுற்றித் திரும்பியுள்ளனர். முதலாவது விண்வெளி வீராங்கனை வாலன்டினா வி.தெரஸ்கோவா என்ற ரஷியப் பெண்மணி 1963 ஜூன் 16 அன்று வாஸ்டாக்-5 எனும் விண்கலத்தில் பயணம் செய்தவர். தமது 26-ம் வயதில் 48 தடவை பூமியைச் சுற்றியவர். இத்தனைக்கும் இவர் ஒரு சாதாரண பஞ்சாலைத் தொழிலாளியின் மகள்.
உலகின் இரண்டாவது வீராங்கனையும் ஒரு ரஷியப் பெண்மணிதான். ஸ்வெத்லேனா ஒய்.சவித்ஸ்கயா. இவர் சோயுஸ்-7 (1982) மற்றும் சோயுஸ்-12 (1984) விண்கலங்களில் ஆக இரண்டு முறை விண் பயணம் செய்த முதல் மங்கை. சோயுஸ்-12 விண்கலத்தில் இருந்து அண்டவெளியில் இறங்கி மிதந்த முதல் பெண் சாதனையாளரும்கூட.
அமெரிக்க விண்வெளி வரலாற்றில் முதலாவது வீராங்கனை என்ற சிறப்புக்கு உரியவர் சாலி ஏ.ரைடு. விண்வெளி சென்ற மூன்றாவது பெண்மணி இவரே. தமது 32-வது வயதில் 1983 ஜூன் 18 அன்று அமெரிக்காவின் சாலஞ்சர் விண்வெளி ஓடத்தில் பயணம் செய்தவர். இவரது கணவரும் விண்வெளி வீரரும் ஆன ஸ்டீவன் ஹாவ்லியிடம் கேட்டபோது, ""அவளை மட்டும் விண்பயணத்திற்கு தேர்வு செய்திருக்காவிட்டால் எனக்குப் பைத்தியமே பிடித்திருக்கும்'' என்றாராம். இருவருமே காதல் தம்பதியர் அல்லவா?
விண்வெளி வீரமரணம் அடைந்த பெண்மணிகளுக்கும் அஞ்சலி செலுத்த வேண்டும். 1986 ஜனவரி 28 அன்று சாலஞ்சர் விபத்தில் அமெரிக்க நாட்டு இரண்டாவது விண்வெளி வீராங்கனை ஜுடித் ஏ.ரஸ்னிக், விண்வெளி சென்ற முதலாவது ஆசிரியை கிறிஸ்டா மக் ஆலிஃப் ஆகியோருடன் 2003 பிப்ரவரி முதல் நாளன்று பூமிக்குத் திரும்பும் வழியில் நடுவானில் வெடித்துச் சிதறிய கொலம்பியா விண்வெளி ஓடத்தில் உயிர்த்தியாகம் செய்த நம் நாட்டு முதல் வீராங்கனை கல்பனா சாவ்லா பற்றி எல்லாம் உலகிற்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.
அன்னா லீ ஃபிஷர் எனும் பெண்மணி 1984-ம் ஆண்டு டிஸ்கவரி விண்வெளிப் பயணத்தின்போது அண்டவெளியில் இறங்கி சாகசம் நிகழ்த்தினார். வேறு ஒன்றுமில்லை, அங்கே பழுதாகிச் சுற்றிக் கொண்டிருந்த "பலாப்பா' செயற்கைக்கோளை இயந்திரக் கை உதவியால் பூமிக்கு இழுத்து வந்தார் என்றால் பாருங்களேன். இவர் விண்வெளிக்குச் சென்றபோது ஒரு குழந்தைக்குத் தாய். அதனால் விண்வெளி சென்ற முதல் அன்னை அன்னா லீ ஃபிஷர் என்பதும் முத்திரைத் தகவல். உண்மையில் இல்லறம் சிறக்க குழந்தை பெற்றுக்கொண்ட முதல் விண்வெளி தம்பதியர் மார்க்கரெட் ரியா செட்டான்- ராபர்ட் லீ கிப்சன் ஆகியோர். இந்த அமெரிக்க வீராங்கனை மூன்று முறை விண்வெளி ஓடங்களில் பயணம் செய்தவர். கணவர் போட்டி போட்டுக் கொண்டு ஐந்து முறை விண் சுற்றியவர். தம்பதியருள் அதிகத் தடவை புவி சுற்றிய கணவர் இவர்தான். மனைவி நச்சு தாங்காமல் அடிக்கடி விண்வெளி கிளம்பி விடுகிறாரோ என்று மட்டும் சந்தேகப்பட வேண்டாம்.
அறிவியல் உணர்வுப் பெருக்கினால் வெவ்வேறு நாடுகளின் விண்கலன்களில் பிற நாட்டுப் பெண்மணிகள் நட்புப் பயணம் செய்வதும் உண்டு. ரஷியா, அமெரிக்கா அல்லாத பிற நாட்டு விண்வெளி வீராங்கனையர் வரிசையில் முதலிடம் வகிப்பவர் ஹெலன் பி.ஷர்மான் என்ற இங்கிலாந்துப் பெண்மணி. தமது 28 வயதில் ரஷிய நாட்டு சோயுஸ்-டி.எம்.12 என்னும் விண்கலனில் பயணம் செய்தார். அவ்வாறே, கிளாடி அந்த்ரே தெஷாய்ஸ் என்கிற பிரெஞ்சுப் பெண்மணி (சோயுஸ்-டி.எம்.24) விண்வெளி சென்ற முதல் ஐரோப்பிய மங்கை. இவர் உயிரி வேதியியல் விஞ்ஞானி.
வேற்று இனப் பெண்டிரும் காழ்ப்புணர்வு மறந்து விண்வெளி என்னும் எதார்த்தச் சமத்துவவெளியில் ஒன்றாய் பறந்த வரலாறும் பதிவாகி உள்ளது. 1992-ம் ஆண்டு அமெரிக்க "எண்டவர்' ஓடத்தில் மேயி சி.ஜெமிசன் என்னும் முதல் கறுப்பினப் பெண்மணியும் 1994 ஜூலை மாதம் "கொலம்பியா' ஓடத்தில் கீழை நாட்டின் சியாக்கி முக்கை எனும் ஜப்பானியப் பெண்ணும் விண்வெளி சென்று திரும்பினர். இவர்களில் ஜெமிசன் விண்வெளிப் பயணம் செய்த முதலாவது பெண் மருத்துவரும் கூட.
அவ்வாறே ரஷியாவிற்கும் அமெரிக்காவிற்கும் விண்வெளி நல்லிணக்கத்தின் அடையாளமாக விண்ணூர்தியில் புவி சுற்றி வந்துள்ளனர். ஷானன் டபிள்யு.லூசிட் என்னும் அமெரிக்க வீராங்கனை ரஷிய "மிர்' விண்கலத்திற்குச் சென்று ஆய்வுகள் நடத்தி இருக்கிறார். இவரும் உயிரி வேதியியல் நிபுணர். உலக விண்வெளி வீராங்கனையர் சரித்திரத்தில் நீண்ட காலம் அதாவது -223 நாட்கள் விண்வெளியில் தங்கி சாதனை படைத்த பெண்மணியும் இவரே. அன்றியும் அதிகபட்சமாக ஐந்து தடவை புவி சுற்றிய வீராங்கனை எனும் முத்திரை பதித்த முதல் வீராங்கனை.
முதன் முறையாக வர்த்தக ரீதியில் அமெரிக்காவின் சர்வதேச விண்சுற்று நிலையத்துக்குச் சென்றவர் அனூஷே அன்ஸாரி என்னும் ஈரானியப் பெண்மணி. 2006 செப்டம்பர் 18 அன்று ரஷிய நாட்டு சோயுஸ் டி.எம்.ஏ.9 விண்ணூர்த்திக்கு அவர் செலுத்திய கட்டணம் 2 கோடி டாலருக்கும் அதிகம். விண்வெளிக்குச் சென்ற முதலாவது இசுலாமியப் பெண்மணி. இதனாலேயே சில விமர்சனங்களுக்கும் ஆளானார்.
இந்திய வம்சாவளியைச் சார்ந்த மற்றொரு விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பற்றி தெரியாதவர் யாருமே இருக்க முடியாது. 2007 செப்டம்பர் இறுதியில் ஒரு வார காலம் இந்தியாவிற்கு வந்திருந்தாரே. சர்வதேச விண்வெளி நிலையத்தில் நீண்ட நாட்கள் தங்கிய சாதனையாளர். 195 நாட்கள் என்றால் சும்மாவா? இதற்கு மத்தியில் ஏறத்தாழ 29 மணி நேரம் 17 நிமிடங்கள் அண்டவெளியில் இறங்கிப் புற வாகனச் செயல்பாட்டிலும் ஈடுபட்டாராமே.
இவ்விதம் நாடு, மதம், சாதி, மொழி, இனம், நிறம் ஆகிய புறப் பாகுபேத எல்லைகளைக் கடந்த ஒரே சமத்துவ பூமி விண்வெளி அல்லவா? அதனால்தான் பாரதியின் "புதிய கோணங்கி' மாதிரி ""சாத்திரம் வளருது; சூத்திரம் தெரியுது; மந்திரம் பெருகுது; தந்திரம் வளருது'' என்று பாடத் தோன்றுகிறது.

No comments:

Post a Comment